திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான்
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்கள்
பெரிய நம்பிகள் அருளிச்செய்தது
ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம்
மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருமதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோநிஸ்சிகாயமநவைமுநிவாஹநந்தம்.
திருமலை நம்பிகள் அருளிச் செய்தது
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காட்டவே கண்ட பாத
    கமலம்நல் லாடை யுந்தி,
தேட்டரு முதர பந்தம்
    திருமார்பு கண்டம் செவ்வாய்,
வாட்டமில் கண்கள் மேனி
    முனியேறித் தனிபு குந்து,
பாட்டினால் கண்டு வாழும்
    பாணர்தாள் பரவி னோமே.
அமலனாதிபிரான்
ஆசிரியத் துறை
927
அமல னாதிபிரா னடியார்க்
    கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர் கோன்விரை
    யார்பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதிவானவன்
    நீள்மதி ளரங்கத் தம்மான், திருக்
கமல பாதம்வந் தென்கண்ணி
    னுள்ளன வொக்கின்றதே.#
1
928
உவந்த வுள்ளத்தனா யுலக
    மளந் தண்டமுற,
நிவந்த நீள்முடியன் அன்று
    நேர்ந்த நிசாசரரை,
கவர்ந்தவெங்கணைக் காகுத்தன் கடியார்
    பொழில்அரங்கத் தம்மான்,அரைச்
சிவந்த ஆடையின் மேல்சென்ற
    தாமென் சிந்தனையே.
2
929
மந்தி பாய்வட வேங்கட
    மாமலை, வானவர்கள்,
சந்தி செய்யநின்றா னரங்கத்
    தரவி னணையான்,
அந்தி போல்நிறத்தாடையு மதன்மேல்
    அயனைப் படைத்ததோரெழில்
உந்தி மேலதன் றோஅடி
    யேனுள்ளத் தின்னுயிரே.#
3
930
சதுரமா மதிள்சூ ழிலங்கைக்
    கிறைவன் தலைபத்து
உதிர வோட்டி,ஓர் வெங்கணை
    யுய்த்தவ னோத வண்ணன்,
மதுரமா வண்டுபாட மாமயிலாடரங்கத்
    தம்மான், திருவயிற்
றுதர பந்தன மென்
    னுள்ளத்துள்நின் றுலாகின்றதே.
4
931
பாரமாய பழவினை பற்ற
    றுத்து, என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி
    யென்னுள் புகுந்தான்,
கோர மாதவம்செய்த னன்கொலறியே
    னரங்கத் தம்மான், திரு
வார மார்பதன் றோஅடி
    யேனை யாட்கொண்டதே.
5
932
துண்ட வெண்பிறை யான்துயர்
    தீர்த்தவன், அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர்
    மேய வப்பன்
அண்ட ரண்டபதிரண்டத் தொருமாநிலம்
    எழுமால்வரை, முற்றும்
உண்ட கண்டங்கண் டீரடி
    யேனை யுய்யக்கொண்டதே.
6
933
கையி னார்சுரி சங்கன
    லாழியர், நீள்வரைபோல்
மெய்யனார் துளப விரையார்
    கமழ்நீள் முடியெம்
ஐயனார், அணியரங்கனா ரரவி
    னணைமிசை மேமாயனார்,
செய்யவா யையோ! என்னைச்
    சிந்தை கவர்ந்ததுவே.!
7
934
பரிய னாகிவந்த அவுண
    னுடல்கீண்ட, அமரர்க்கு
அரிய ஆதிபிரா னரங்கத்
    தமலன் முகத்து,
கரிய வாகிப்புடை பரந்துமிளிர்ந்து
    செவ்வரி யோடி,நீண்டவப்
பெரிய வாயகண்க ளென்னைப்
    பேதைமை செய்தனவே.!
8
935
ஆலமா மரத்தி னிலைமே
    லொரு பாலகனாய்,
ஞால மேழு முண்டா
    னரங்கத்தரவி னணையான்,
கோல மாமணியாரமும் முத்துத்தாமமும்
    முடிவில்ல தோரெழில்
நீல மேனி யையோ!நிறை
    கொண்டதென் நெஞ்சினையே!#
9
936
கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை,
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்,மற் றொன்றினைக் காணவே.#
10
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com